லண்டன் (இங்கிலாந்து): ஐரோப்பிய நாடுகளின் முன்னணி 24 அணிகள் மோதிய யூரோ கோப்பையின் இறுதிப்போட்டி இன்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்தப்போட்டியில், ஜார்ஜியோ சியெலினி தலைமையிலான இத்தாலி அணியும், ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
கடந்து வந்த பாதை:
இரு அணிகளும் இந்தொடர் முழுவதும் தோல்வியே தழுவாமல், நேர்த்தியாக விளையாடி வந்தன. இந்த தொடரில் இத்தாலி அணி 4 கோலையும், இங்கிலாந்து அணி ஒரு கோலையும் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தாலி 4 முறை உலக சாம்பியன் என்றாலும், கடைசியாக யூரோ கோப்பை வென்றது 1968-இல் தான். இங்கிலாந்து அணிக்கு இதுதான் முதல் யூரோ கோப்பை இறுதிப்போட்டி. தொடர் ஆரம்பத்தில் அதிக எதிர்பார்ப்பில்லமல் இருந்த இரு அணிகளும், இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதால் இந்த போட்டிக்கு உலக முழுவதும் பெரும் எதிர்பாரப்பு எழுந்தது.
ஆரம்ப அதிர்ச்சி:
இவ்வுளவு எதிர்பார்ப்பு மிக்க போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்து இத்தாலி அணிக்கு மட்டுமல்ல, போட்டியைக் கண்டுகொண்டிருந்த அத்தனை பேருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
கீரன் டிரிப்பியர் கொடுத்த அருமையான க்ராஸ் பாஸில், லுக் ஷா அடித்த அந்த கோல் இத்தாலியின் தடுப்புச் சுவரை சுலபமாக உடைத்துச்சென்றது. இந்த கோலுக்கு பின்னர் இத்தாலி பெரும் தாக்குதலை தொடுக்கும் எனக் கருதப்பட்டது.
ஆனால், இத்தாலி அணியால் கோல் போஸ்டைக் கூட நெருங்க முடியவில்லை. இதன் நடுவே ஆறாம் நிமிடத்தில் இத்தாலிக்கு கிடைத்த ஃப்ரி-கிக் வாய்ப்பை ஃபெடரிகோ சிசா விணடித்தார்.
இத்தாலியின் திணறல்:
அதன் பின்னர், இங்கிலாந்து அணி தாக்குதல் நிறுத்தி தடுப்பாட்டத்தை கைகொண்டது. இத்தாலியின் முன்கள வீரர் சிரோ இம்மொபைலிடம், இங்கிலாந்து அணி பந்தை செல்லவே விடமால் பார்த்துக்கொண்டது.
இங்கிலாந்து அணி, தனது சொந்த நாட்டு ரசிகர்களுக்கிடையே விளையாடுவதால் முதல் பாதியில் பெரும் உற்சாகத்தோடு காணப்பட்டது. இதனாலேயே இத்தாலி அணி பந்தை நீண்ட நேரம் தன்வசம் வைத்திருந்தாலும், அவர்களால் பாக்ஸ் உள்ளே பந்தை கொண்டு செல்லவே இயலாதபடி இங்கிலாந்து கவனித்துக்கொண்டது.
முதல் பாதியில் நான்கு நிமிடம் கூடுதல் நேரமாக கொடுக்கப்பட்ட நிலையில், இம்மொபைல் கோல் வாய்ப்பை உருவாக்க, இங்கிலாந்தின் டி லொரோன்சோ அணையாக நின்று அந்த வாய்ப்பை தடுத்தார். இதன்மூலம், இறுதிப்போட்டியின் முதல்பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இம்மொபைல் அவுட்:
யாரும் எதிர்பார்க்காத முடிவாக, இரண்டாம் பாதியில் இத்தாலியின் இம்மொபைலுக்கு பதிலாக பெரார்டி களத்துக்குள் புகுந்தார். இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும், இரண்டாம் பாதியில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்திவந்த இத்தாலி இந்த போட்டியிலும் அதையே தொடர்ந்தது.
ஒரு கோல் அடித்துவிட்ட இங்கிலாந்து சற்று மிதப்பில் இருக்க இத்தாலி அதை பயன்படுத்திக்கொள்ள முனைந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் இருந்தே இத்தாலி கோலை நோக்கி படையெடுத்துக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் அசைக்க முடியாத தடுப்பாட்டம் கூட, இத்தாலியின் இந்த தொடர் முயற்சியால் மிகவும் தடுமாறிக் காணப்பட்டது.
இரண்டாவது கோலை தேடி...
அத்தனை வாய்ப்பு கிடைத்தும், கோலாக மாற்ற முடியாத விரக்தியில் இருந்த இத்தாலி அணி, அடுத்தடுத்து பந்தை பாக்ஸின் உள்ளே திணித்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லியோனார்டோ போனூசி கோல் அடித்து இத்தாலி அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டுவந்துவிட்டார்.
இதன்பின், பதற்றமடைந்த இங்கிலாந்து அணியால், தங்களுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம், 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
பெனால்டியை நோக்கி...
ஆட்டம் சமநிலையில் இருந்ததால், கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் முடிவை தீர்மானிக்க ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.
நகத்தை பதம்பார்த்த பெனால்டி
பெனால்டியின் முதல் ஷூட் வாய்ப்பு இத்தாலி அணிக்கு கிடைத்தது.
முதல் ஷூட் - இத்தாலியின் பெரார்டியும், இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேனும் கோல் அடித்தனர். (1-1)
இரண்டாவது ஷூட் - இத்தாலியின் பெலோட்டி கோல் அடிக்க தவற, இங்கிலாந்தின் மகுய்ரே கோல் அடித்து முன்னிலை பெற்றார். (1-2)
மூன்றாவது ஷூட் - இத்தாலியின் பேனூசி கோல் அடிக்க, இங்கிலாந்தின் ராஷ்வோர்டு கோலை மிஸ் செய்தார். (2-2)
நான்காவது ஷூட் - இத்தாலியின் பெர்னார்டெச்சி கோல் அடித்தும், இங்கிலாந்தின் சான்சோ கோலை வீணடிக்க, இத்தாலி முன்னிலை பெற்றது. (3-2)
ஐந்தாவது ஷூட் - இந்த கோலை அடித்தால் வெற்றி என்ற நிலையில், இத்தாலி வீரர் ஜார்ஜின்ஹோ
கோலை தவறவிட்டார். இருப்பினும், இங்கிலாந்து கோல் அடித்தால் சமநிலையில், இல்லையெனில் அடுத்த ஷூட் என்று கால்பந்து உலகமே இங்கிலாந்து அணியின் ஷாக்காவின் காலையும், டோனாரும்மா கண் மீதுதான் கவனத்தை குவித்திருந்தது.
ஷாக்கா அடித்த அந்த ஷூட்டை, டோனாரும்மா எளிதாக கணித்து தடுக்க, 53 வருடங்களுக்கு பின் யூரோ கோப்பையை தட்டித்தூக்கியது இத்தாலி அணி.
இதையும் படிங்க: ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!