யுஈஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் லீக் ஏ குரூப் 1 பிரிவில் இடம்பெற்றிருந்த இத்தாலி-போலாந்து அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இத்தாலி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதனைப் பயன்படுத்தி அந்த அணியின் ஜோர்கினோ முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த போலாந்து அணியின் முயற்சிகளை இத்தாலி வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் இரண்டாம் பாதியின் 83ஆவது நிமிடத்தில் மீண்டும் இத்தாலியின் பெரார்டி கோல் அடிக்க, இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்மூலம் அந்த குரூப்பில் முதல் இடத்தை இத்தாலி அணி 9 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.
இத்தாலி அணியின் இந்த வெற்றி குறித்து அந்த அணியின் துணை பயிற்சியாளர் அல்பெரிக்கோ கூறுகையில், ''கடினமான சூழ்நிலைகளில் எங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். இதுதான் எங்கள் விளையாட்டின் கலாச்சாரம்'' என்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (நவ.15) நடந்த மற்றொரு போட்டியில் லீக் ஏ குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் ஆடின. இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே பெல்ஜியம் அணி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. பெல்ஜியம் அணியின் யூரி 10ஆவது நிமிடத்திலும், மெர்டன்ஸ் 24ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க, பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலைப் பெற்றது.
இதிலிருந்து இங்கிலாந்து அணி விடுபட முடியாமல் தவிக்க, ஆட்ட நேர இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தத் தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிபிஎல் 10: சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிராத்வெய்ட்