லீசெஸ்டர் சிட்டி எஃப்சி அணியின் முன்னாள் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக இருந்தவர் இயன் ஹமே. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இளம் விரர்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை ஏற்படுத்தி தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஹமே, "ஐரோப்பிய லீக் கால்பந்து தொடர்களை ஒரு பணம் சார்ந்த தொடராகவே மக்கள் கருதுகின்றனர். ஆனால் அவை உலகின் சிறந்த தொடர்களாக இல்லா விட்டால், அதில் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். அதேபோல் இந்தியாவில் நடத்தப்படும் ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்திலிருந்து, வீரர்கள் தங்களின் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு நீங்கள் வரும் வாய்ப்புகளை தவறவிட கூடாது. மேலும் இது நிறைய இளம் இந்திய வீரர்களுக்கும் தங்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பளித்துள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களிடம் தெளிவாகத் தெரிகிறது. இது அவர்களின் முன்னேற்றத்திற்கான ஒரு நிலைப்பாடு ஆகும். மேலும் ஐஎஸ்எல் மூலமாக இந்திய கால்பந்து விளையாட்டும் வளர்ச்சியடையும்" என்று தெரிவித்துள்ளார்.