இந்தியாவில் 2014ஆம் ஆண்டுமுதல் ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை ஆறு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2020-21ஆம் ஆண்டிற்கான சீசனுக்கான வேலைகளில் கிளப் அணிகள் இறங்கியுள்ளன.
இந்நிலையில், கடந்த சீசனில் ஜாம்ஷெத்பூர் எஃப்சி அணியின் கோல்கீப்பராக வலம்வந்த சுப்ரதா பால், அந்த அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து வெளியேறி, தற்போது ஹைதராபாத் எஃப்சி அணியில் இரண்டாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத் எஃப்சி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-20ஆம் ஆண்டிற்கான சீசனில் ஜாம்ஷெத்பூர் எஃப்சி அணிக்காக விளையாடிவந்த 33 வயதான சுப்ரதா பால், வருகிற சீசன்களில் ஹைதராபாத் எஃப்சி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுப்ரதா பால் கூறுகையில், ஹைதராபாத் என்ற பெயர், எப்போதும் இந்திய கால்பந்தாட்ட வரலாற்றில் பல நட்சத்திர வீரர்களை உருவாக்கியுள்ளது. நான் தற்போது ஹைதராபாத் எஃப்சி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.