இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விருந்து படைத்துவருகிறது. இதில் நேற்று (நவ. 24) நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று (நவ. 25) நடைபெறும் ஆறாவது லீக் போட்டியில் எஃப்சி கோவா அணி - மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
எஃப்சி கோவா:
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் பெங்களூரு எஃப்சி அணியுடன் எஃப்சி கோவா அணி விளையாடிய முதல் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. அதிரடியான ஸ்டிரைக்கர்ஸ், பலமான டிஃபென்டர்ஸ்களுடன் களமிறங்கியுள்ள கோவா அணி இன்றையப் போட்டியில் வெற்றியை ஈட்டும் முனைப்பில் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.
அதிலும் கோவா அணியின் நட்சத்திர வீரர் அங்குலா, பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியைத் தோல்வியிலிருந்து மீட்டார். இதனால் இன்றையப் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மும்பை சிட்டி எஃப்சி:
நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிக்கெதிரான முதல் போட்டியிலேயே மும்பை எஃப்சி அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. அப்போட்டியின்போது மும்பை அணியின் மிட் ஃபில்டர் அஹ்மத் ஜஹூவிற்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டதுடன், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்காற்றுக் குழுவின் எச்சரிக்கையையும் சந்தித்தார்.
இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அஹ்மத் ஜஹூ இடம்பெறுவது சந்தேகம்தான். இருப்பினும் திறமையான வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களைக் கொண்டுள்ள மும்பை அணி, வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க:பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பெயர் பரிந்துரை!