இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கராக திகழ்பவர் மிசோரமைச் சேர்ந்த ஜேஜே லால்பெக்லுவா. இந்நிலையில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையின் எஃப்சி அணிக்காக விளையாடி வந்த ஜேஜே, இந்தாண்டு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஐஎஸ்எல் தொடரில் புதிதாக உதயமாகியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி, ஜேஜே லால்பெக்லுவாவை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ஜேஜே, ஐஎஸ்எல் தனது உடற்தகுதியை வலிமைப் படுத்துவதற்காக குத்துச்சண்டை பயிற்சியில் ஆர்வம்காட்டி வருகிறார்.
இதுகுறித்து ஜேஜே கூறுகையில், “சிறுவயதில் எனக்கு பல்வேறு விளையாட்டுகளின் மீது ஆர்வம் இருந்தது. அதில் மிக முக்கியமானது குத்துச்சண்டை மற்றும் டென்னிஸ். சிறுவயதிலிருந்தே குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு, உள்ளூர் போட்டிகளில் வெற்றியை ஈட்டியுள்ளேன்.
அதன் காரணமாக எனக்கு குத்துச்சண்டை மிகவும் பிடிக்கும். ஆனால் என் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து, நான் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தினேன். தற்போது ஊரடங்கினால், எனது உடற்தகுதியில் சிறிது மாற்றம் உள்ளது. அதனை சரிசெய்ய நான் தற்போது குத்துச்சண்டை பயிற்சிக்கு திரும்பியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தோனி பிஸ்தாவா இருக்கலாம், ஆனா அவர் சொல்ற எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது - ஸ்ரீகாந்த்