இத்தாலி நாட்டில் சீரி ஏ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்டர் மிலன் நகரில் உள்ள சான் சிரோ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் யுவன்டஸ் அணி, இன்டர் மிலன் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இன்டர் மிலன் அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த அணியை சேர்ந்த ரட்ஜா நைங்கோலன் (Radja Nainggolan) 7ஆவது நிமிடத்தில் அசத்தலான கோல் அடித்தார். பின் யுவன்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 62ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்து மிரட்டினார்.
இந்த கோல் மூலம், கிளப் அணிகளுக்காக 600 கோல் அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். அதன் பின்னர், இரு அணி வீரர்களும் கோல் அடிக்கத் தவறியதால், இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இப்போட்டியில் யுவன்டஸ் அணி டிரா செய்தாலும், புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. யுவன்டஸ் அணி இந்தத் தொடரில் விளையாடிய 34 போட்டிகளில் 28 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி என 88 புள்ளிகளை பெற்றுள்ளது.