மகளிருக்கான ஐந்தாவது தெற்காசிய கால்பந்துத் தொடர் நேபாளத்தின் பிரட்நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் நேபாளம், வங்கதேசம், பூடான் அணிகள் குரூப் ஏ பிரிவிலும்- இந்தியா, இலங்கை, மலாத்தீவு அணிகள் குரூப் பி பிரிவுகளிலும் இடம்பெற்றிருந்தன.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, நேபாளத்துடன் மோதவுள்ளது.
இந்தியா-நேபாளம் அணிகள் இறுதிச் சுற்றுக்கு கடந்துவந்த பாதை:
குரூப் பி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவு அணியை பந்தாடியது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
பின்னர் வங்கதேசத்துடன் மோதிய அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து ஐந்தாவது முறையாக முன்னேறியுள்ளது.
இந்திய அணியில் வீராங்கனை இந்துமதி, சஞ்சு, ரதன்பாலா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
மறுமுனையில், நேபாளம் அணியும் இந்தத் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அணி குரூப் போட்டியில் பூடான், வங்கதேச அணிகளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப் போட்டியில், நேபளாம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு நான்காவது முறையாக தகுதிப் பெற்றுள்ளது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து நான்குமுறை கைப்பற்றிய இந்திய அணி இன்றையப் போட்டியிலும் வெற்றிபெற்று, ஐந்தாவது முறையாக கோப்பையைத் தட்டிச் செல்லுமா? என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்தப் போட்டி இன்று மதியம் 2.45 மணியளவில் பிரட்நகரில் நடைபெறவுள்ளது.