இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வரும் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் நிதியுதவி செய்துவருகின்றனர்.
இந்தநிலையில், இந்தியக் கால்பந்து வீரர் வினீத், கரோனா தடுப்பு அரசு உதவி மையத்தில் சேர்ந்து மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,"கேரளா விளையாட்டு கவுன்சில் என்னை தொடர்புக்கொண்டு கரோனா தடுப்பு மையத்தில் உதவிபுரிய முடியுமா எனக் கேட்டவுடன், நான் அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தேன்.
இந்தக் இக்கட்டான தருணத்தில் என்னால் முடிந்த உதவியை நான் செய்துவருகிறேன். நாட்டில் கரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை நாங்கள் எங்களது பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். அரசாங்கத்தின் வழிமுறைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு தொடர்புக்கொள்ளும் போது உதவி செய்துவருகிறோம்.
முன்னதாக, ஒருநாளில் தொலைபேசி மூலம் 150 உதவி அழைப்புகள் வரும். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனது சொந்த மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இந்தக் கடினமான சூழலை நாம் வலிமையுடன் எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் நாம் வீட்டிலேயேப் பாதுகாப்புடன் இருப்பதுதான். அனைவரும் அரசாங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுகொள்கிறேன்" என்றார்.
31 வயதான இவர் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷட்பூர் அணிக்காக விளையாடிவருகிறார் என்பது கவனத்துக்குரியது. இந்தியாவில் கேரளாவில்தான் முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும், தற்போது அந்தப் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லிவர்பூல் ஜாம்பவானுக்கு கோவிட் 19 தொற்று!