நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022இல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய கண்டங்களுக்கான தகுதிச்சுற்றின் குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்த அணிகளுக்கு ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், இந்திய அணி ஓமன் அணியுடனான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆசிய சாம்பியனான கத்தார் அணியுடன்(62ஆவது ரேங்க்), இந்திய அணி (103ஆவது ரேங்க்) பலப்பரீட்சை நடத்தியது.
கத்தார் அணி முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தகுதிச்சுற்றுப் போட்டியில் 6-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றிருந்தது. இதனால், இன்றைய போட்டியில் கத்தார் அணியின் ஆட்டத்துக்கு இந்திய அணி ஈடுகொடுக்குமா என்ற கேள்வி எழுந்தது.
கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஜாஸ்மின் பின் ஹமாத் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோல் அடிப்பதற்கான முயற்சியில் கத்தார் அணி வீரர்கள் ஈடுபட்டனர். எனினும் கத்தார் வீரர்கள் அடித்த ஷாட்டுகளை இந்திய அணியின் கோல்கீப்பர் குர்ப்ரீத்சிங்கால் பலமுறை தடுத்து நிறுத்தினார்.
![football](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4390538_football.jpg)
அதேசமயம், அட்டாக்கிங் முறையில் ஈடுபட்ட இந்திய வீரர்களாலும் கோல் அடிக்க முடியாமல் போனது. இறுதி நிமிடம் வரை பரபரப்புக்கு இட்டுச் சென்ற இப்போட்டி கோலின்றி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் கத்தார் அணி வீரர்கள் பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். இருப்பினும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் எதிரணியில் கோல் வாய்ப்பு தகர்க்கப்பட்டது.
இந்த போட்டி டிரா ஆனதால் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளின் புள்ளி பட்டியலில் இந்திய தனது முதல் புள்ளியை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கத்தார் அணி 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அடுத்ததாக இந்திய அணி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.