கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடத்தப்படும் ஐ லீக் கால்பந்து போட்டிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து இன்றுவரை பல மாதங்களாக கால்பந்து போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளன.
இந்த நிலையில் 14ஆவது சீசனுக்கான ஐ லீக் கால்பந்து தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐ லீக் தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ லீக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளை மேற்கு வங்க அரசுடன் இணைந்து இந்திய கால்பந்து சங்கம் ஆகியவற்றுடன் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஒருங்கிணைந்து நடத்தியது.
இந்த சீசனுக்கு 11 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து வீரர்களும் பயோ பபுள் சூழலில் தங்கவைக்கப்படவுள்ளனர்.
இந்தத் தொடரில் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் ஃபிர்ஸ்ட் லெக் போட்டியில் அனைத்து அணிகளையும் எதிர்கொள்ளும்.
அதில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வகையில் மீண்டும் ஒன்றோடு ஒன்று ஆடும். மீதமுள்ள 5 அணிகள் தங்களுக்குள்ளாகவே ஒன் லெக் வகையில் விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ லீக் தொடரின் அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், காலி மைதானங்களில்தான் போட்டிகள் நடத்தப்படும்.
இதையும் படிங்க: கோவிட்-19: ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய மோகன் பாகன்!