ஸ்பெயினில் இந்த சீசனுக்கான லா லிகா கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி எய்பார் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்தே பார்சிலோனா அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த அணியின் புதுமுக வீரர் க்ரீஸ்மேன் 13ஆவது நிமிடத்தில் சிறப்பாக கோல் அடித்து அணிக்கு முன்னிலைத் தந்தார். லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக அவர் அடிக்கும் நான்காவது கோல் இதுவாகும்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி 58ஆவது நிமிடத்தில் மிரட்டலான கோல் அடித்தார். அதன்பின், அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் சுவாரஸ் தன்பங்கிற்கு 66ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதனால், பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி இந்த சீசனில் விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றி, ஒரு டிரா, இரண்டு தோல்வி என 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.