கால்பந்து போட்டிகளில் கோல் அடிப்பதைக் காட்டிலும் கோல் தடுப்புதான் மிகவும் கடினம். ஒரு கோல் கீப்பர் எத்தனை கோல் தடுத்தார் என்பதைவிட அவர் எத்தனை கோலை விட்டார் என்பதுதான் கவனிக்கப்படும். முன் கள வீரர்கள், நடு கள வீரர்கள் சொதப்பினாலும் சில சமயங்களில் கோல் கீப்பர்கள் எதிரணி வீரர்கள் கோல்கள் அடிக்காதவாறு தடுத்து நிறுத்தி அணியை வெற்றிபெறச் செய்வர்.
அந்தவகையில், தனது சிறப்பான கோல் கீப்பிங் திறமையால் செல்சி அணிக்கு பல வெற்றிகளைத் தேடிதந்வர் பீட்டர் பெனாட்டி. எதிரணியின் கோல்களை பறந்து பறந்து தடுத்ததால் இவர் ’The Cat’ என அழைக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் செல்சி கால்பந்து கிளப் அணிக்காக 1960 முதல் 1975ஆம் ஆண்டுவரையும் பின் 1977 முதல் 1979ஆம் ஆண்டுவரையும் 729 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம், அந்த அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அதில் தனது சிறப்பான ஆட்டத்தால் 208 போட்டிகளில் எதிரணியை ஒரு கோலும் அடிக்கவிடாமல் தடுத்துள்ளார். அதற்கு ஆங்கிலாத்தில் ’க்ளின் ஷீட்’ எனப் பெயர். இவரது சிறப்பான ஆட்டத்தால் செல்சி அணி 1965இல் லீக் பட்டமும், 1970இல் எஃப்ஏ கோப்பையையும் வென்றது. அதேபோல இங்கிலாந்து அணிக்காகவும் இவர் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிபட்டுவந்த அவர் நேற்று இரவு உயிரிழந்ததாக செல்சி கால்பந்து கிளப் அணி தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 78. இதையடுத்து, இவரது உயிரிழப்புக்கு கால்பந்து வீரர்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு அரசு உதவி மையத்தில் சேவை செய்துவரும் கால்பந்து வீரர்!