அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் துளசிதாஸ் பலராம் - கொல்கத்தா
கொல்கத்தா: ஒலிம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் துளசிதாஸ் பலராம், மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (மார்ச்.23) கொல்கத்தா, உத்தரபாராவில் உள்ள அவரது வீட்டில் கீழே விழுந்ததை அடுத்து, பலராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். தொடர்ந்து அவரது மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
84 வயதான பலராம் வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்டு வந்த நிலையில், செவிலியர் ஒருவரின் மேற்பார்வையில் தன் வீட்டிலேயே அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். முன்னதாக அறுவை சிகிச்சைக்காக பலரும் அவருக்கு உதவ முன்வந்த நிலையில், அவற்றை அவர் மறுத்துள்ளார்.
நட்சத்திர கால்பந்து வீரராகத் திகழ்ந்த பலராம், இந்தியக் கால்பந்து கலாச்சாரம் காரணமாக அதனை வெறுப்பவராகவும், எந்த ஒரு சிறந்த ஐரோப்பிய கால்பந்தாட்ட கிளப்பிற்கும் விளையாடும் திறன்களைக் கொண்டவாரவும் இருந்தார். 1990ஆம் ஆண்டு அவரது பெயர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், கடைசி நேரத்தில் அவரது கோப்புகள் தொலைந்து போனது குறிப்பிடத்தக்கது.