இந்தியாவில் கிரிக்கெட்டை உயிருக்கு உயிராக நேசிக்கும் மற்ற மாநிலங்கள் மத்தியில் கேரளா எப்போதும் தனித்து தெரியும். ஏனெனில், அங்கு கிரிக்கெட்டை காட்டிலும் கால்பந்து விளையாட்டுக்குத் தான் மவுஸ் அதிகம். அதிலும் குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருபடி மேல். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு கால்பந்து விளையாட்டை ரசித்துப் பார்ப்பார்கள்.
தற்போது கரோனா வைரசால் ஜெர்மனியைத் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவிலும் கால்பந்து போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், கால்பந்து விளையாட்டு என்றால் தங்களுக்கு உயிர் என்பதை மலப்புர வாசிகள் முகக்கவசங்கள் பயன்படுத்துவதன்மூலம், மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மலப்புரத்தில் கால்பந்து அணிகளின் சின்னம் பொறித்த முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகள் ட்ரெண்டாகியுள்ளது.
பார்சிலோனா, ரியல் மாட்ரிட், பிரேசில், அர்ஜென்டினா, யுவென்டஸ், லிவர்பூல், மான்செஸ்ட்ர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி உள்ளிட்ட கால்பந்து அணிகளின் சின்னம் பொறித்த முகக்கவசங்களின் விற்பனை அங்கு அமோகமாக உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில் தங்களுக்குப் பிடித்த அணிகளின் சின்னம் பொறித்த முகக்கவசங்களை வாங்கி செல்கின்றனர்.
விளையாட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யும் கிக்-ஆஃப் என்ற நிறுவனம் இந்தச் சிறப்பு முகக்வசங்களை மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனாவால் சரிவடைந்த தொழிலை மீட்டெடுக்கும் விதமாக ஷாஜகான் என்ற தொழில்முனைவோர் எடுத்த இந்த முடிவுதான் அங்கு செம ஹிட்டாகியுள்ளது.
நாள்தோறும் கால்பந்து அணிகளின் சின்னம் பொறித்த நான்காயிரம் முகக்கவசங்கள் மலப்புர மாவட்டத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. விரைவில் நட்சத்திர கால்பந்து வீரர்களின் புகைப்படங்கள் பொறித்த முகக்கவசங்களும் தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெஸ்ஸி ஸ்டைலில் ஃப்ரீகிக் கோல் அடிக்கும் சிறுவன்!