ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, எஸ்பான்யோல் (Espanyol) அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, பார்சிலோனா அணி பந்தை அதிகம் பாஸ் செய்து ஆடியது. இதன் பலனாக, பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கியும், அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டத்திலும், இதே போன்று ஆடிய பார்சிலோனா அணிக்கு 71-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் கிடைத்தது. இதை, அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, கோலாக மாற்றி அனைவரையும் வியப்படைய செய்தார்.
இதனிடையே, பார்சிலோனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோல் அடிப்பதற்காக எஸ்பான்யோல் வீரர்கள் கடுமையாக போராடினர். இருப்பினும், பார்சிலோனா வீரர்கள் டிஃபென்டிங்கில் தூணாக இருந்ததால், எஸ்பான்யோல் அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இறுதிக் கட்டமான 89-வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இதனால், பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்பான்யோல் அணியை வீழ்த்தியது. இதன்மூலம், பார்சிலோனா அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.