கரோனா வைரஸின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் குறையத் தொடங்கியுள்ளதால், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு சீசன் கால்பந்து லீக் போட்டிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இத்தாலி, ஜெர்மனியில் உள்ள கால்பந்து கிளப் வீரர்கள், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து பார்வையாளர்களின்றி மூடப்பட்ட மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயிற்சியின்போது சக வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்குமாறு ஜெர்மனி கால்பந்து சம்மேளனம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், செல்சி அணியின் முன்னாள் ஸ்ட்ரைக்கரும் தற்போதைய ஹெர்தா பெர்லின் அணியின் வீரருமான சாலமன் கலோ ஓய்வறையில் சக வீரர்களுடன் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல், கைகுலுக்கி ஜாலியாக இருந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
ஜெர்மன் கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறையை மீறியதால் சாலமான் கலோவை ஹர்தா பெர்லின் அணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கரோனா வைரஸ் குறித்த ஆபத்தை உணராமல் இப்படி நடந்துக்கொண்டதற்கு மன்னிப்பு கேட்பதாக சாலமன் கலோ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்களின் இருக்கைகள் பிரச்னைகளுக்கு முடிவுகட்டிய மான்செஸ்டர் யுனைடெட்