கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் இரண்டு மாதங்களுக்கு மேலாக அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும், ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சில நாட்களாக நிதி நெருக்கடி காரணமாக பன்டெஸ்லீகா, கே-லீக் உள்ளிட்ட கால்பந்து தொடர்கள், பார்வையாளர்களின்றி நடந்து வருகின்றன. இந்நிலையில், மெக்ஸிக்கோ நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் லீகா எம்.எக்ஸ் கால்பந்து தொடரும் பார்வையாளர்களின்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இத்தொடரில் பங்கேற்கும் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனையை லீகா எம்.எக்ஸ் நிர்வாகம் மேற்கொண்டது. அப்பரிசோதனை முடிவில் அத்தொடரின் பிரபல கிளப் அணியான சாண்டோஸ் லகுனா அணியைச் சேர்ந்த எட்டு கால்பந்து வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாண்டோஸ் லகுனா அணியைச் சேர்ந்த எட்டு வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் யாருக்கும் எந்தவிதமான அறிகுறிகளோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவித்துள்ளது.
கரோனா வரைஸ் காரணமாக கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் ஒத்திவைக்கப்பட்டிருந்த லீகா எம்.எக்ஸ் கால்பந்து தொடர், ஜூன் முதல் வாரத்தில் பார்வையாளர்களின்றி நடத்துவதாக இருந்தது. தற்போது அத்தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களுக்கு பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மீண்டும் இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பறிபோனதா வில்லியம்சனின் கேப்டன்சி?