கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தவர் பிரேசிலின் ரொனால்டினோ. இவர், தனது சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் அணிக்குப் பல வெற்றிகளைத் பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, 2002 ஃபிபா உலகக்கோப்பைக் கால்பந்துத் தொடரைப் பிரேசில் அணி வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றிற்காக, இவரும், இவரது சகோதரர் ராபர்டோ ஆகியோர் கடந்த மார்ச் 4ஆம் தேதி பாராகுவே நாட்டிற்குச் சென்றனர்.
அப்போது போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாகக்கூறி, அவர்கள் இருவரையும் பாராகுவே காவல்துறையினர் மார்ச் 6ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தனக்குத் தெரியாதததால் ஜாமின் வழங்கக் கோரி ரொனால்டினோ தரப்பிலிருந்து, மூன்றுமுறை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் படி, அவர்கள் இருவரும் பாராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டினோ, “எங்களுடைய பாஸ்ட்போர்ட் சட்ட விரோதமானது என்று கூறியதும் நாங்கள் ஆச்சரியப்பட்டோம். மேலும் அப்போது நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஆதரவளிப்பதை மட்டுமே சிந்தித்து வந்தோம். அப்போது முதல் இத்தருணம் வரை எங்களிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் விளக்கமளித்துள்ளோம்.
இருப்பினும் இது எங்கள் வாழ்வின் கடினமான சூழ்நிலை என நான் கருதுகிறேன். ஏனெனில் இது போன்ற ஒரு சூழ்நிலையை நான் சந்திப்பேன் என கனவிலும் நினைத்தது கிடையாது. நான் எப்போதும் எனது ரசிகர்களுக்கும், எனது விளையாட்டிற்கும் மிக சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டுள்ளேன். ஆனால் தற்போது எனக்கு தெரியாமல் நடந்த ஒரு குற்றத்திற்காக தண்டனையை அனுபவிப்பது வருத்தமளிக்கிறது.
இருப்பினும் இச்சூழலில் கோவிட்-19 பெருந்தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்த்து வாழ்ந்து வரும் எனது அம்மாவிற்கு நான் முதலில் முத்தமிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'அஸ்வினை விட ஹர்பஜன் சிங் நல்ல ஸ்பின்னர்' - பும்ரா