2017இல் ஆடவர் யு17 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்றது. இதில், கொலம்பியா அணிக்கு எதிரான குரூப் போட்டியில் ஜாக்சன் கிங் இந்திய அணி சார்பில் யு17 உலகக்கோப்பை தொடரில் முதல் கோலை அடித்தார்.
இந்திய அணி கடுமையாக போராடினாலும் அப்போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. இப்போட்டியின் போது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஜாம்பவான் என்றாலும் மனதளவில் குழந்தையைப் போன்றவர் என்பதைத் தான் புரிந்து கொண்டதாக முன்னாள் வீரர் யூஜெனேசன் லிங்டோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அந்தப் போட்டி எந்த தேதியில் நடந்தது என்று என்னால் சரியாக நினைவு கூற முடியவில்லை. அடுத்த நாள் மக்காவ் அணிக்கு எதிரான போட்டி இருந்தது. இதில் வெற்றி பெற்றால் ஏஎஃப்சி ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான தகுதி கிடைக்கும் என்பதால் நாங்கள் அப்போது பெங்களூரு முகாமில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டோம்.
பயிற்சி முடிந்த உடன் ஹோட்டலுக்கு விரைந்து சென்று இந்தியா - கொலம்பியா யு17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நாங்கள் அந்தப் போட்டியை ஒன்றாகப் பார்த்திருந்தாலும், சுனில் தானே போட்டியில் விளையாடுவதைப் போல் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணியும் அந்தப் போட்டியில் முழு ஒருங்கிணைப்புடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது.
சில நேரங்களில் என்னைப் பார்த்து, புன்னகைத்தும், போட்டியைக் குறித்து கருத்தும் தெரிவித்தார். பின்னர் மீண்டும் போட்டியில் அவர் ஆழமாக மூழ்கினார். ஒரு கோல் பின்தங்கிய நிலையில், இந்திய அணி கோல் அடித்து பதிலடி தந்தது. அந்தத் தருணத்தை சுனில் சேத்ரி குழந்தையைப் போல படுக்கையில் இருந்து குதித்து கூச்சலிட்டது மட்டுமின்றி அறைக்கு வெளியே ஓடி உற்சாகமாகக் கொண்டாடினார்.
அந்த தருணத்தில்தான் அவர் ஜாம்பவனாக இருந்தாலும் மனதளவில் எப்போதும் சிறு குழந்தையை போன்றவர் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஒரு ரூம்மேட் என்ற முறையில் சுனில் சேத்ரியின் மிகப் பெரிய குணம், அவர் உங்களை மிகவும் வசதியாக பார்த்துக்கொள்வார்” என்றார்.