ஜப்பான் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான ஜே1 லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் முன்னாள் வீரரான டேவிட் வில்லா விசெல் கொபே (Vissel Kobe) அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் விசெல் கொபே அணி, மட்சுமோடோ யமஹா (Matsumota Yamaha) அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டம் தொடங்கிய 13ஆவது நிமிடத்திலேயே டேவிட் வில்லா அட்டகாசமான முறையில் கோல் அடித்து, அணிக்கு முன்னிலை தந்தார்.
இதையடுத்து, 80ஆவது நிமிடத்தில் விசெல் கொபே வீரர் ஜெய்ஜீரோ ஹெட்டர் முறையில் கோல் அடித்தார். அதன்பின், மட்சுமோடோ வீரர் ஜெர்ஜின்ஹோ 93ஆவது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணிக்கு ஆறுதல் தந்தார். இறுதியில், விசெல் கொபே அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின்மூலம், அந்த அணி விளையாடிய 26 போட்டிகளில் 9 வெற்றி, ஐந்து டிரா, 12 தோல்வி என 32 புள்ளிகளுடன் ஒன்பாதவது இடத்தில் உள்ளது.