கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 53 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒரு சில நாடுகள் தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக கால்பந்து, கிரிக்கெட் வீரர்கள் தங்களது தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது பேரு நாடும் தங்கள் நாட்டு கால்பந்து வீரர்கள் தனிப்பட்ட பிற்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் மார்ட்டின் விஸ்கர்ரா(Martin Vizcarra), விளையாட்டு வீரர்களுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வுகளை அளித்துள்ளார்.
இது குறித்து விஸ்கர்ரா கூறுகையில், ‘தொழிமுறை கால்பந்து கிளப்களை சேர்ந்த வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென, பெருவின் கால்பந்து கூட்டமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று விளையாட்டு வீரர்களும் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்றால் பெரு நாட்டில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘வருடம் ஒரு முறை இத பண்ணுங்க’ - சிட்சிபாஸ் ஓபன் டாக்!