2019-20ஆம் ஆண்டுக்கான எஃப்ஏ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று (ஆகஸ்ட் 1) லண்டனில் உள்ள வெம்பிளி மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆர்சனல் - செல்சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே கோல் அடிக்கும் நோக்கில் விளையாடிய செல்சி அணி ஐந்தாவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து அமர்க்களப்படுத்தியது. செல்சி அணியின் நட்சத்திர முன்கள வீரர் புலிசிக் (Pulisic) கோல் அடித்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை ஆர்சனல் வீரர் அபுமெயங் (Aubameyang) கோல் அடித்தார். பின்னர் இரு அணிகளும் அட்டாகிங் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
இந்நிலையில், ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் அபுமெயங், செல்சி அணியின் டிஃபெண்டர் கர்ட் சவுமாவை கச்சிதமாக கடந்து அசத்தலான கோல் ஒன்றை அடித்து, ஆர்சனல் அணியின் கோல் ஸ்கோரை இரண்டாக்கினார்.
இதையடுத்து ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபுல் செய்ததால் செல்சி அணியுடன் நடுகள வீரர் கொவாசிச்சிற்கு (Kovocic) நடுவர் ரெட் கார்ட் வழங்கினார். இதனால் ஆட்டத்தின் கடைசி தருணத்தில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு செல்சி அணி தள்ளப்பட்டது.
இறுதியில் ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி 14ஆவது முறையாக எஃப்ஏ கோப்பையை வென்று அசத்தியது.