வல்லாடோலிட் (ஸ்பெயின்): லா லீகா கால்பந்து தொடரின் கடைசி நாளான நேற்று (மே 22) தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அட்லெடிகோ மாட்ரிட் - வல்லாடோலிட் அணிகள் ஒரு போட்டியிலும், ரியல் மாட்ரிட் - வில்லாரியல் அணிகள் மற்றோரு போட்டியிலும் மோதின.
இதில், அட்லெடிகோ மாட்ரிட், வல்லாடோலிட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம், 38 போட்டிகளில் விளையாடி 86 புள்ளிகளைப் பெற்றது. மற்றொரு போட்டியில், ரியல் மாட்ரிட் அணி வில்லாரியல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 38 போட்டிகளில் 84 புள்ளிகள் பெற்றது.
இதனால், 11ஆவது முறையாக அட்லெடிகோ மாட்ரிட் அணி லா லீகா தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2013-14 சீசனில் தொடரை வென்ற அட்லெடிகோ, ஏழு ஆண்டுகள் கழித்து லா லீகா தொடரை வென்றுள்ளது.
கடந்த சீசனில் கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் இம்முறை இரண்டாம் இடத்தையும், பார்சிலோனா அணி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அட்லெடிகோ - வல்லாடோலிடிக்கு இடையிலான போட்டியில், 18ஆவது நிமிடத்தில் ஆஸ்கார் பியானோ கோல் அடித்ததால், வல்லாடோலிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், இரண்டாவது பாதியில் அட்லெடிகோவின் கொரியா, லுயிஸ் சுரேஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து மிரட்டினர். இதனால் அட்லெடிகோ 2-1 என்ற கோல் கணக்கில் தனது வெற்றியை உறுதி செய்தது.
ரியல் மாட்ரிட் - வில்லாரியலுக்கான மற்றொரு போட்டியில், 20ஆவது நிமிடத்தில் யெரெமி பினோ வில்லாரியலுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால் 87ஆவது நிமிடத்தில், ரியல் மாட்ரிட் அணிக்கு கரீம் பென்செமா முதல் கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார். கடைசி நேரத்தில், லூகா மோட்ரிக்கும் கோல் அடித்து அசத்த, ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.
இதையும் படிங்க: கிழிந்த காலணியைப் பதிவேற்றிய ஜிம்பாப்வே வீரர்; உதவிக்கரம் நீட்டிய பூமா