விளையாட்டுத் துறையில் அர்ஜூனா விருது மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த விருது விளையாட்டுத் துறையில் சாதனைப் படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுத்தோறும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து, ஸ்ட்ரைக்கர் ஜேஜே ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்க, அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.
சுனில் சேத்ரிக்கு அடுத்தப்படியாக இவ்விரு வீரர்களும் இந்திய கால்பந்து அணியில் முன்னணி வீரர்களாக திகழ்கின்றனர். இந்திய கால்பந்து அணிக்காக இதுவரை 53 சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜேஜே இதுவரை 23 கோல்கள் அடித்துள்ளார்.
சுனில் சேத்ரிக்குப் பிறகு, இரண்டு ஆசிய கால்பந்து போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து பெற்றுள்ளார்.
முன்னதாக, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இவ்வீரு வீரர்களுக்கும் அர்ஜூனா விருது வழங்கக் கோரி, அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
2017இல் இந்திய கால்பந்து வீராங்கனை பெம்பெம் தேவிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் வேறு எந்த வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை