சென்னை: எத்தனை விளையாட்டுகள் இருந்தாலும், உலக அளவில், மவுசு குறையாத அளவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கையை கொண்டு இருக்கும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட் என்றால் அது மிகையாகாது. கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் கூட, டீ கடையோ அல்லது வேறெதும் கடையிலோ டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டு இருப்பதை பார்த்தால் ஒரு நிமிடமாவது தங்களது அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பது உண்டு.
மேலும், யாருப்பா பேட்டிங், என்ன ஸ்கோர் என்று கேட்பதையும் வழக்கமாக கொண்டு இருப்பதை காண முடியும். அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டின் மகுடம் என அழைக்கப்படும், உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள், ஆவலோடு காத்திருக்கும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நாட்டின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா இம்முறை நடத்துகிறது. அதேநேரம், முற்றிலும் இந்தியா மட்டுமே நடத்தக் கூடிய தொடர் என்பதால் கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
உலக அளவில் ஒப்பிடுகையில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் தான் அதிகம். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள், முழுவதும், இந்த உலக கோப்பை தொடருக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த போட்டி இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடைபெற உள்ளது.
இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகள், போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சாம்பியனுக்கு ரூ.33 கோடி: இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் விளையாடும் 48 போட்டிகளுக்கு பரிசுத் தொகையை பி.சி.சி.ஐ வழங்குகிறது. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற தவறும் ஆறு அணிகளுக்கு சுமார் 82 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதேபோல குரூப் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு சுமார் 33 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதியில் தோல்வியை தழுவும் 2 அணிகளுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு சுமார் 16 கோடி ரூபாயும், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 33 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாகா வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த அணிக்கு வாய்பு: இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது. கடந்த 2011 உலகக் கோப்பை தொடரை இந்தியா ஏற்று நடத்தியது. அந்த ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து, 2015 ஆஸ்திரேலியா ஏற்று நடத்தியது, அந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஏற்று நடத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை பார்க்கையில் இந்த ஆண்டு தொடரை நடத்தும் இந்தியா கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. 2011ஆம் ஆண்டு முதல், எந்த நாடு உலக கோப்பை தொடரை நடத்துகிறதோ, அந்த நாட்டின் அணியே வெற்றி பெற்று வருவது உற்று நோக்கும் விஷயமாக காணப்படுகிறது. அந்த வரிசையில் மீண்டும் இந்திய அணி இடம் பெறுமா என்று பல தரப்பினர்களாலும் எதிர்பார்க்கபடுகிறது.
கடந்து வந்த பாதை: இந்தியா தனது முதல் உலக கோப்பை போட்டியை 1979 ஆம் ஆண்டு சந்தித்தது. அதைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதைத் தொடர்ந்து 1987, 1996 ஆண்டுகளில் அரை இறுதி சுற்று வரை சென்றது. 2003 ஆம் ஆண்டு 2ஆவது இடத்தை இந்திய அணி பிடித்தது.
தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு, எம்.எஸ். தோனி தலைமையில், கடந்த 2011 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. அந்த ஆண்டில் தான் அனைத்து நட்டசத்திர வீரர்களும் அணியில் இடம் பெற்று இருந்தனர். அதைத் தொடர்ந்து, 2015, 2019 ஆண்டுகளில் அரை இறுதி வரை இந்திய அணி சென்றது.
வர்ணனையாளர்கள்: எந்த போட்டியாக இருந்தாலும் அதை வர்ணிக்கும் விதம் எப்போது நம்மை கவர்ந்துக் கொண்டு தான் இருக்கும். அதன்படி, இந்த உலக் கோப்பை தொடரை 10 நாடுகளை சேர்ந்த, தமிழ் உட்பட 9 மொழிகள் பேசும் வர்ணனையாளர்கள் தொகுத்து வழங்க உள்ளனர். இதில், ரமிஸ் ராஜா, ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்சரேக்கர், தினேஷ் கார்த்திக், சுப்ரமணியம் பத்ரிநாத், சுனில் கவாஸ்கர், அஞ்சும் சோப்ரா, ரிக்கி பாண்டிங், மோர்கன், வாட்சன், லிசா ஸ்தாலேக்கர், ஆரோன் பிஞ்ச், மேத்யூ ஹைடன், நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், என பலர் வர்ணையாளர் அணியை அலங்கரிக்கின்றனர்.
இதையும் படிங்க : கிரிக்கெட் அரசன் வீழ்ந்தது எப்படி? உலக கோப்பை முதல் தகுதிச் சுற்று வெளியேற்றம் வரை! செய்யத் தவறியது என்ன?