ஹைதராபாத்: கிரிக்கெட் ரசிகர்கள் அல்லாது உலகில் உள்ள அனைவருமே பெரிதும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஐசிசி நடத்தும் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்.5ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 10 அணிகள் விளையாட உள்ளன. இதற்காக தீவிரமான பயிற்சியில் அனைத்து அணிகளின் வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்.29 ஆம் தேதி முதல் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையானது அனைத்து அணிகளின் மீதும் திரும்பியுள்ளது. உலகக்கோப்பையை வெல்ல போவது யார்? அதற்கான உத்திகளை எந்த அணி திறன்பட கையாளும்? அணிகளின் முக்கிய வீரர்களின் பங்களிப்பு என பல எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.
உலகக்கோப்பையின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி (Eng VS Nz) எதிர்கொள்கிறது. இந்த தொடர்களில் கடந்த இரு எடிசன்களான 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியை எவராலும் மறக்க முடியாது. இதில் முதலில் போட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர், களம் இறங்கிய இங்கிலாந்து அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 241 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை டிரா செய்தது.
அதன் பின், சூப்பர் ஓவரிலும் டிரா ஆன நிலையில், பவுண்டரி கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தனது முதல் உலகக்கோப்பை கைப்பற்றியது. இப்படி கடந்த இரு எடிசன்களாக, நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்டது. அதனால், அந்த அணி இம்முறை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கும்.
அணியின் பேட்டிங்: அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் மற்றும் டிரெண்ட் போல்ட் உள்ளனர். பேட்டிங்கை பொருத்தவரை, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டு, அணிக்கு திரும்பியுள்ளார். இவர் கடந்த செப்.29ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் களம் கண்டவர். அதில் சிறப்பாக ஆடிய அவர், 8 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் விளாசினார். மேலும், இவர் இதுவரை 161 போட்டிகள் விளையாடி 6,555 ரன்கள் குவித்துள்ளார். இதில், 13 சதங்கள் மற்றும் 42 அரைசதங்களும் அடங்கும்.
அதே போல், விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான டாம் லாதம், ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட கூடியவர். இவர் இந்திய மண்ணில் விளையாடிய 11 இன்னிங்ஸில் 475 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 52.77 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பேட்டிங்கில் டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக உள்ளனர்.
பலம் தரும் பந்துவீச்சு: பந்து வீச்சைப் பொருத்தவரை டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் அனுபவம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். இவர்கள் வெவ்வெறு நிலையில், பந்தை நன்கு ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர்கள். அணியின் கூடுதல் பலமாக இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னர் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் விளையாடிய 104 ஒருநாள் போட்டிகளில், 197 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதேபோல், டிம் சவுத்தி விளையாடிய 157 போட்டிகளில் 214 விக்கெட்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 33.6 ஆக உள்ளது. மற்றொறு வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன், தொடர்ச்சியாக பந்தை 150 வேகத்துக்கு மேல் வீசக்கூடிய திறன் கொண்டவர். இவர் இதுவரை விளையாடிய 58 ஒருநாள் போட்டிகளில் 89 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் லெக் ஸ்பின்னர் இஷ் சோதி, இதுவரை தனது அணிக்காக 49 ஒருநாள் போட்டிகளில், 61 விக்கெட்களை எடுத்துள்ளார். இவர், 39 ரன்கள் வழங்கி 6 விக்கெட்கள் வீழ்த்தியதே இவரது சிறந்த பந்து வீச்சாகும்.
சவால் தரும் 'நியூசிலாந்து அணி': ஆகவே, நியூசிலாந்து அணி கடந்த உலகக்கோப்பை தொடர்களில் சவால் அளித்தது போல, இம்முறையும் அதை செய்யும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. அதே வேளையில், மற்ற அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில், நியூசிலாந்து அணி அவர்களைப் போராடி வெல்ல வேண்டும் என்றால் மனரீதியாகவும், தந்திர ரீதியாகவும் தனது பலத்தை நிரூபிக்க தயாராக இருக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்லப்போனால், நியூசிலாந்து அணி அனுபவம் மற்றும் இளம் வீரர்கள், பல்துறை பந்து வீச்சு தாக்குதல் மற்றும் நம்பகத்தன்மையான பேட்டிங் என நல்ல நிலையில் உள்ளது. குறிப்பாக, அவர்களின் மிடில் ஆடர் பேட்டிங்கை சரி செய்வதும், தொடர் முழுவதும் அணி வீரர்களின் உடல்தகுதியை உறுதி செய்வதன் மூலம் அவர்களால் இந்த உலகக்கோப்பை தொடரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனலாம்.
இதையும் படிங்க: Cricket World Cup 2023: உலகக் கோப்பையின் சீனியர் வீரர்கள்! இவர்களுக்கு எண்டே கிடையாது?