ஹைதராபாத்: ஐசிசி நடத்திய 13வது உலகக் கோப்பை கடந்த மாதம் 19ஆம் தேதி நிறைவடைந்தது. இத்தொடரை ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. ரசிகர்கள் அதிகம் வருகை தந்ததாக இருக்கட்டும், வணிக ரீதியாகட்டும் அனைத்திலுமே வெற்றி பெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடராக இந்த 13வது உலகக் கோப்பை தொடர் அமைந்தது.
இருப்பினும், இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தவற விட்டது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனதை உடைத்தெறிந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ஆடுகளமே காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்தனர்.
அதேபோல் இந்திய தங்களுக்குச் சாதகமாக பிட்ச் அமைத்ததே கடைசியில் அவர்களுக்கு ஆபத்தாக அமைந்தது எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் சராசரியாக உள்ளது என ஐசிசி மேட்ச் ரெஃப்ரியும் முன்னாள் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் ஆன ஆண்டி பைக்ராஃப்ட் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியான ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதிக் கொண்ட மைதானத்தின் பிட்சும் சராசரியாகவே உள்ளது என ஐசிசி சார்பில் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய அணி விளையாடிய 11 போட்டிகளில் 5 போட்டிகள் விளையாடிய மைதானத்தின் பிட்ச் சராசரி என ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகக் கொல்கத்தா, இங்கிலாந்துக்கு எதிராக லக்னோ, பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சென்னை ஆகிய மைதானங்கள் அடங்கும்.
இதற்கிடையில், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதியில் மோதிக் கொண்ட மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் நன்றாக உள்ளது என ரேட்டிங் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: 4 -1 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினிடம் வீழ்ந்த இந்தியா!