நவி மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் கோலாகமாக நேற்று (மார்ச் 4) தொடங்கியது. இந்த தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், உத்தரப் பிரதேச வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தனர்.
அதிகபட்சமாக மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வெறும் 30 பந்துகளுக்கு 65 ரன்களை குவித்தார். அதேபோல ஹேலி மேத்யூஸ் 31 பந்துகளுக்கு 47 ரன்களையும், அமெலியா கெர் 24 பந்துகளுக்கு 45 ரன்களையும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். இதனிடையே நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 23 ரன்களை கொடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் சினே ராணா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்ட்னர், ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 208 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் அணி வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். மும்பை பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதலாவதாக களமிறங்கிய கேப்டன் பெத் மூனி ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இவருடன் களமிறங்கிய சாப்பினேனி மேகனா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர் இருவரும் ரன்களின்றி டக் அவுட்டாகினர். அதன்பின் வந்த அனாபெல் சதர்லேண்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்கவே, ஜார்ஜியா வேர்ஹாம் 8 ரன்களில் அவுட்டானார்.
தயாளன் ஹேமலதா நீண்ட நேரம் விக்கெட்டை பறிகொடுக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தும் 29 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இவருக்கு அடுத்த வந்த வீராங்கனைகளும் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த வகையில் 15.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 64 ரன்களை மட்டுமே குஜராத் அணி எடுத்து தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு பிரபோர்ன் மைதானத்தில் தொடங்குகிறது. அதேபோல இரவு 7.30 மணிக்கு உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி உடன் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி நவி மும்பையில் உள்ள டிஓய் பாட்டீல் மைதானத்தில் மோதுகின்றது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன்.. 6ஆவது முறையாக சாதனை..