நவி மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 3ஆவது ஆட்டம் நேற்று (மார்ச் 5) நடந்தது. அதில், அலிசா ஹீலி தலைமையிலான உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியும், சினே ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் ஜெயன்ட்ஸ் கேப்டன் சினே ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய குஜராத் வீராங்கனைகள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 பந்துகளுக்கு 46 ரன்களை எடுத்து அசத்தினார். அதேபோல ஆஷ்லே கார்ட்னர் 19 பந்துகளுக்கு 25 ரன்களையும், எஸ் மேகனா 15 பந்துகளுக்கு 24 ரன்களையும் எடுத்து அணிக்கு பக்கபலமாக இருந்தனர். கேப்டன் சினே ராணா பேட்டிங் லைன்னின் இறுதியில் களமிறங்கி 7 பந்துகளுக்கு 9 ரன்களை மட்டுமே எடுத்தார்.
மறுப்புறம் பந்துவீச்சில் உபி வாரியர்ஸ் அணியின் தீப்தி ஷர்மா மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளையும், அஞ்சலி சர்வானி, தஹ்லியா மெக்ராத் தலா 1 விக்கெட்டையும் எடுத்து அசத்தினர். அந்த வகையில் 170 ரன்கள் வெற்றி இலக்குடன் உபி வாரியர்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்கரரான கேப்டன் அலிசா ஹீலி 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டாகி அதிர்ச்சியளித்தார். இவருடன் வந்த ஸ்வேதா செஹ்ராவத் 6 பந்துகளுக்கு 5 ரன்களுடன் வெளியேறினார்.
மூன்றாவதாக களமிறங்கிய கிரண் நவ்கிரே நிதானமாக விளையாடி 43 பந்துகளுக்கு 53 ரன்களை குவித்தார். இருப்பினும் சுஷ்மா வர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார். இதையடுத்து வந்த தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா முறையே 0, 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். ஏழாவதாக களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 26 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அதேபோல இறுதியாக களமிறங்கிய சோஃபி எக்லெஸ்டோன் 12 பந்துகளில் 22 ரன்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தார். 19.5 ஓவர்கள் முடிவிலேயே 175 ரன்களை எடுத்து குஜராத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். மறுப்புறம் குஜராத் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சாளர் கிம் கார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல அனாபெல் சதர்லேண்ட் ஒரு விக்கெட்டை வீழ்த்திய இருந்தார். இந்த போட்டியிலும் குஜராத் ஜெயன்ட்ஸ் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக் 2023.. பெங்களூரு அணி தோல்வி.. ஷஃபாலி வர்மா அபாரம்..