சிட்டகாங்: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடந்தது. இந்த போட்டியில் வங்தேச கிரிக்கெட் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி 2ஆவது ஒருநாள் போட்டி அதே மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியிலும் வங்கதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஒருநாள் தொடரை வங்கதேசம் கைப்பற்றிய நிலையில், இன்று (டிசம்பர் 10) சிட்டகாங்கில் உள்ள மைதானத்தில் 3ஆவது போட்டி நடந்துவருகிறது. முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிபடுத்திவருகின்றனர். 44 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்களை குவித்துள்ளனர்.
இதில், இஷான் கிஷன் 131 பந்துகளுக்கு 210 ரன்களை குவித்தார். இரட்டை சதமடித்து அணிக்கு பெரும் வலுசேர்ந்துள்ளார். மறுப்புறம் விராட் கோலி 91 பந்துகளுக்கு 113 ரன்களை எடுத்தார். இந்த சதம் அவரது 72ஆவது சர்வதேச சதமாகும். அதன்மூலம், அவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 1,214 நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்ததால் அவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: FIFA World Cup: காலிறுதியில் வெளியேறிய பிரேசில்