லக்னோ : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
நடப்பு சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாதி கிணற்றை தாண்டிவிட்ட நிலையில், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க உலக அணிகள் போராடி வருகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெறும் இன்று (அக். 29) நடைபெறும் 29வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் விளையாடி 1 தோல்வி 5 வெற்றிகள் கண்ட தென் ஆப்பிரிக்க அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இந்திய அணி முயற்சிக்கும். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என மும்முனைகளிலும் வீரர்கள் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். தொடக்க வீரர் ரோகித் சர்மா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு பலமாக உள்ளனர்.
இவர்கள் மூவரும் ஒருசேர ரன் குவிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி செல்ல வேண்டி இருக்கும் என்றால் அது மிகையாகாது. இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் மூன்று விதத்திலும் அந்த அணி சொதப்பி வருகிறது. இதுவரை எதிர்கொண்ட 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற அனைத்திலும் படுதோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அடுத்த சுற்று வாய்ப்பை ஏறத்தாழ இழந்த இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற இந்த ஆட்டத்தில் முயற்சிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இங்கிலாந்து அணியில் பேட்டிங் ஆர்டர் மிக மோசமாக உள்ளது. நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திண்டாடி வருகின்றனர்.
வெற்றிக்காக இந்திய அணியும், ஆறுதல் வெற்றிக்காக இங்கிலாந்து அணியும் முயசிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :
இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர்.
இங்கிலாந்து : ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட், சாம் குர்ரன், பிரைடன் கார்ஸ், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன்.
இதையும் படிங்க : "ரோஹித் சர்மா, விராட் கோலி பகுதி நேரமாக பந்து வீச வேண்டும்" - முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா கருத்து!