சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) ஐந்தாவது சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஜூலை 19) இரவு தொடங்கியது. இப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின.
கங்காவின் ஆட்டம்
இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கோவை அணிக்கு கங்கா ஸ்ரீதர், கவின் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க சேலம் அணியில் விஜய் சங்கர் முதல் ஓவரை வீச வந்தார். நான்கு ஓவர்களில் கோவை அணி எடுத்த 37 ரன்களில், கங்கா 33 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது ஓவரை வீசிய கணேஷ் மூர்த்தி, கங்கா ஸ்ரீதரை 33 (20) ரன்களில் வெளியேற்றினார். அதன்பின்னர் இடதுகை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் களமிறங்கினார்.
சுதர்சன் - கவின் கூட்டணி
கவினுடன் ஜோடி சேர்ந்த சுதர்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், விஜய் சங்கர் வீசிய 12ஆவது ஓவரிலேயே, சுதர்சன் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். சுதர்சன் - கவின் இணை 121 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. இந்த சமயத்தில் விஜய் சங்கர் பந்துவீச்சில் கவின் 33(41) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒரு ஓவர் 3 விக்கெட்டுகள்
இதற்கிடையில், 18ஆவது ஓவரை பெரியசாமி வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை அணியின் கேப்டன் ஷாருக்கானை 1(2) ரன்னிலும், அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சாய் சுதர்சனை 87(43) ரன்களிலும் வீழ்த்தி அசத்தினார் பெரியசாமி. மேலும், கடைசி பந்தில் முகிலேஷ் ரன் அவுட்டாக இந்த ஓவரில் மட்டும் கோவை அணி மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆட்டம் ரத்து
இதனிடையே, கடுமையாக மழை பொழிய ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. மழை நீண்டநேரமாக பெய்துகொண்டே இருந்ததால், மீதி ஆட்டம் தொடங்கப்படவில்லை.
மழை தொடர்ந்து பெய்ததால் இறுதியில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.