சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் ப்ளே-ஆஃப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாக்-அவுட் போட்டியான எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் விளையாடிவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, கோவை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கம் முதலே தடுமாறி வந்த கோவை அணியில், கங்கா ஸ்ரீதர் ராஜூ 5 ரன்களிலும், சுரேஷ் குமார் 19 ரன்களிலும், அஸ்வின் வெங்கட்ராமன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஐந்தாவது அரைசதம்
ஒரு முனையில், சாய் சுதர்சன் வழக்கம்போல் ரன் குவித்து வந்தார். முகிலேஷ் 17 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, கேப்டன் ஷாருக்கான் களம் புகுந்தார். சுதர்சன் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்து வந்த ஷாருக்கான் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடைசிநேரத்தில் சிறிது சிறிதாக ரன்களைச் சேர்த்த சுதர்சன், தன்வர் இணை, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது.
திண்டுக்கல் பேட்டிங்
கோவை அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 57 ரன்களை குவித்து, இந்த தொடரில் அவரின் ஐந்தாவது அரைசதத்தைப் பதிவு செய்தார். திண்டுக்கல் அணியில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டைகளை கைப்பற்றினார். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் திண்டுக்கல் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. திண்டுக்கல் அணி தற்போது 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களைச் சேர்த்து தொடர்ந்து விளையாடிவருகிறது.