இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகச் சென்று, அத்தொடரில் தனது அபாரத் திறமை, கடின உழைப்பு ஆகியவற்றால் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராகக் களம்கண்டதுடன், பந்துவீச்சிலும் சிறப்பாகப் பங்களித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து இந்தியா திரும்பிய அவருக்கு, சாரட் வண்டி, செண்டை மேளதாளம் முழங்க அவரது சொந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டு பெரும்பேறும் புகழும் பெற்றார்.
அவரது அடுத்தடுத்த போட்டிகளை கண்டுகளிக்க இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்துள்ள நிலையில், மார்ச் 12ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் நடராஜன் ஆடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. நடராஜன் இல்லை என்றால் அது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்குமே பெரிய ஏமாற்றம்தான். 19 வீரர்கள் கொண்ட இந்திய டி20 அணியில் நடராஜன் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
அதுமட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியும் களமிறங்க வாய்ப்பில்லை எனவும், அவருக்கு பதிலாக ராகுல் சாஹர் களமிறங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க...டி20 போட்டிகள்: நடராஜன், வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு!