டாக்கா(வங்கதேசம்): ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடவிருக்கிறது. இந்நிலையில், டாக்காவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் பேட்டிங்
இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹாசன் 36(33) ரன்களும், முகமத் நைம் 30(29) ரன்களும் சேர்த்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் ஹசல்வுட் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
ஆஸி., தடுமாற்றம்
இதனையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆட்டமிழக்க மிட்சல் மார்ஷ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவரும் 45(45) ரன்களுக்கு வெளியேற ஆஸ்திரேலியா அணி பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால், ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களையே எடுத்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நசும் அகமது சுழலில் சிக்கி சிதைத்தனர் என்றே கூற வேண்டும்.
ஆட்டநாயகன் அகமது
நசும் அகமது 4 ஓவர்களை வீசி 19 ரன்களை விட்டுகொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஆட்டநாயகனாக நசும் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஆக.4) நடைபெற இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி அண்மையில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்திருந்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 13ஆவது நாள் அட்டவணை: இந்தியாவின் போட்டிகள் எப்போது?