டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல், எல்பிஎல் (லங்கா பிரிமியர் லீக்) தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுதொடர்பாக கண்டி டஸ்கர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பந்து வீச்சாளராக அங்கம் வகித்தவர் முனாஃப் படேல். அந்தத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய இவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2018ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதையடுத்து, தற்போது முனாஃப் படேல் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதானுடன் இணைந்து வரும் 26ஆம் தொடங்கவிருக்கும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மன்பிரித் கோனி, கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்தத் தொடர் டிசம்பர் 16ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது. கொழும்பு, கண்டி, கலே, தம்புலா, ஜஃபனா என ஐந்த அணிகள் விளையாடவிருக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 70 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள படேல், 63 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராஜ் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: கறுப்பின நடுவர்கள் இல்லாதது பற்றி விசாரணை நடத்துக: ஈசிபி மீது எழுந்துள்ள இனவெறி குற்றச்சாட்டு!