மும்பை : 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை காட்டிலும் நடப்பு சீசனில் அதிக ரிஸ்க்குகளை எடுக்க நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தயார் நிலையில் இருப்பதை காண முடிகிறது என்று முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை (நவ. 15) நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டில் கண்ட தோல்விக்கு நடப்பு சீசனில் பதிலடி கொடுக்க இந்திய அணியும், மீண்டும் வெற்றி மைல்கல்லை படைக்க நியூசிலாந்து அணியும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், கடந்த 2019 உலக கோப்பையை காட்டிலும் நடப்பு சீசனில் அதிக ரிஸ்க்குகளை எடுக்க நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தயார் நிலையில் இருப்பதை காண முடிகிறது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். காயம் காரணமாக நீண்ட ஓய்வுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்து உள்ள கேன் வில்லியம்சன், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை மூன்று அரைசதங்களை விளாசி உள்ளார்.
2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை காட்டிலும் நடப்பு சீசனில் கேன் வில்லியம்சனின் ஆக்ரோஷமான ஆட்டத்தை காண முடிவதாக சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார். ஓவருக்கு 6 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோருக்கான தரநிலை என்ற நிலையில், அந்த யுக்தியை கேன் வில்லியம்சன் எதிர்நோக்கி உள்ளதாக கவாஸ்கர் கூறினார்.
அதேநேரம் பவுண்டரிக்கான பந்து வரும்போது அதை அடித்து துரித ரன் சேகரிப்பில் ஈடுபடவும், அதிக ரிஸ்க்குகளை எடுக்கும் மனநிலையில் கேன் வில்லியம்சன் உள்ளார் என்று கூறினார். 2019 பின் கேன் வில்லியம்சனின் மறுபக்கத்தை யாரும் பார்த்ததில்லை, சதம் முதல் டக் அவுட் வரை அனைத்து தரப்பு விளையாட்டையும் விளையாடக் கூடியவர் கேன் வில்லியம்சன் என்றும் குல்திப் யாதவ் பந்துவீச்சை நேர்த்தியாக கையாளும் திட்டத்தை அவர் கொண்டு இருக்கலாம் என்றும் சுனில் கவாஸ்கர் கூறினார்.
இதையும் படிங்க : ஒரே ஓவரில் 6 விக்கெட்! அது எப்படி?