துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது. துபாய் மற்றும் சார்ஜாவில் உள்ள மைதானங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
முதலாவது போட்டியில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை வீரர்கள் பேட்டிங் செய்து, 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக, பானுக ராஜபக்ச 29 பந்துகளுக்கு 38 ரன்களையும், சாமிக்க கருணாரத்னே 38 பந்துகளுக்கு 31 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் பந்துவீச்சில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி 3 விக்கெட்டுகளையும், முஹம்மது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அதன்பின் 106 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர்.
தொடங்க ஆட்டக்காரர்களான ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஜஸாய் 28 பந்துகளுக்கு 37 ரன்களையும், குர்பாஸ் வெறும் 18 பந்துகளுக்கு 40 ரன்களையும் குவித்து அணிக்கு வலு சேர்ந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 106 ரன்களை குவித்து வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2022 முழு அட்டவணை... இந்தியா vs பாகிஸ்தான்...