சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த நடராஜன் முழங்கால் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அவருக்கு பதிலாக கலீல் அஹமது அணியில் சேர்க்கப்பட்டார். நடராஜன் அணிக்கு எப்போது திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் முழுவதும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடராஜனின் உடல்நிலை குறித்து அந்த அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில், "முழங்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளிலும் நடராஜன் ஆடமாட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்தால் அவர் 7 நாட்களுக்கு காத்திருக்க வேண்டும். பிறகு குவாரண்டைனுக்குத் திரும்ப வேண்டும். இப்போதைக்கு அவரது உடல் தகுதியை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். மருத்துவர்கள் அவர் முழங்காலை நன்றாக ஆய்வு செய்கின்றனர், ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஸ்கேன் செய்து கொள்ளத்தான் வேண்டும்" என்றார்.
இந்நிலையில், நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் 2021 தொடரிலிருந்து விலகுவதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.