இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்றது.
ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா அணி, தனது முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 79 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர் ராபாடா முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி வீரர் பீட்டர்சென் 72 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.
13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த்தை தவிர மற்ற வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் 198 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. ரிஷப் பந்த் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
212 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 101 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையிலிருந்து இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. வெற்றி இலக்கை நோக்கி எளிதாக நடைபோட்ட தென்னாப்பிரிக்கா ஆட்டக்காரர்கள் இறுதியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றனர்.
அந்த அணியின் இளம் வீரர் பீட்டர்சென் 113 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பீட்டர்சென்னே ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பெற்றும் என்ற கனவில் ரசிகர்கள் இருந்த நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரையும் நழுவவிட்டது.
இதையும் படிங்க: highlights of அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்