அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை (அக். 5) தொடங்க உள்ள நிலையில், நடப்பு சீசனுக்கான பிரம்மாண்ட தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்களும் அதில் வெற்றி பெற்றும் புள்ளி பட்டியலில் முதன்மை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுகளுக்கும் தகுதி பெறும்.
முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் தரமான சம்பவங்களுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதலாவது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
இதில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பிரம்மாண்ட தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் இன்று (அக். 4) மதியம் 2.30 மணி அளவில் அணி கேப்டகளின் புகைப்பட நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் விருந்தினர் மண்டபத்தில் இன்று மதியம் புகைபப்ட நிகழ்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் அனைத்து அணிகளும் கலந்து கொண்டு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என்றும் தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அனைத்து அணிகளின் கேப்டன்களும், குஜராத் கிரிக்கெட் சங்க அலுவலகத்திற்கு இன்று காலை முதலே வரத் தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அன்றைய நாளில் மட்டும் மைதானத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் அகமதாபாத் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஆட்டம் நடைபெறும் அன்றைய நாளில் பார்வையாளர்கள் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கையில் எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டம் உள்பட மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், நரேந்திர மோடி மைதானத்தை எளிதில் சென்றைடையும் வகையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மட்டுமே காணப்படுகிறது. இதன் காரணமாக பார்வையாளர்களின் வசதிக் கேற்ப ஆட்டம் நடைபெறும் நாட்களில் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், 50 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் குஜராத் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : Chepauk stadium: இந்திய கிரிக்கெட்டின் 'லக்கி சார்ம்' சேப்பாக்கம் மைதானம்! அப்படி என்ன இருக்கு?