சென்னை : டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (அக். 10) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் சுப்மான் கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுப்மன் கில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்றும், அவர் சென்னையில் தங்கி மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் பி.சி.சி.ஐ நேற்று (அக். 9) தெரிவித்து இருந்தது. சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்மான் கில்லுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில், அவரது உடலில் ரத்த தட்டை அணுக்கள் குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கத்தை விட ஒரு லட்சம் என்ற அளவில் சுப்மான் கில்லுக்கு ரத்த அணுக்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ரத்த தட்டை அணுக்கள் குறைந்துவிட்டதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பி.சி.சி.ஐ-யின் மருத்துவக் குழுவும் அவரைக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக கோப்பை போட்டியில், இந்தியா தனது, முதல் லீக் ஆட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது. டெங்கு காய்ச்சல் காரணமாக அந்த ஆட்டத்தில் சுப்மான் கில் பங்கேற்கவில்லை.
மேலும், நாளை (அக். 11) டெல்லியில் இந்திய அணி ஆப்கானிஸ்தன் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில், சுப்மன் கில் விளையாடமாட்டார் என்றும், அவர் சென்னையில் தங்கி மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா கூறி இருந்தார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ள இந்திய அணி, டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில், சுப்மான் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலை இன்னும் சரியாகவில்லை என தகவல் கூறப்படுகிறது. இதனால் வரும் 14ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் பங்கேற்பது கடினம் எனக் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : Shubman Gill : சுப்மான் கில் உடல் நிலை? பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மான் கில் விளையாடுவாரா?