இந்தியாவில் நடக்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (BCCI) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் கேப்டன் பதவி தவானிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. மேலும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இல்லாத நிலையில் விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக அணியில் இருப்பார்.
முன்னதாக, இந்தியா செப்டம்பர் 28 முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 செப்டம்பர் 28 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும்.
இரண்டாவது டி20 ஐ மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கவுகாத்தியிலும், அதைத் தொடர்ந்து கடைசி டி20 போட்டி அக்டோபர் 4ஆம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது.
பின்னர் நடக்கவுள்ள ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டனாக அணியை வழிநடத்துவார். முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது. மேலும், மற்ற இரண்டு போட்டிகளும் ராஞ்சி மற்றும் டெல்லியில் அக்டோபர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு