டெல்லி: கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, பந்தைச் சேதப்படுத்திய முறைகேட்டில் ஈடுபட்டதற்காக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருடன் இடைநீக்கம் செய்யப்பட்ட மற்றொரு வீரர் கேமரூன் பான்கிராப்ட்.
இவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்தபோது, பந்தைச் சேதப்படுத்துவதன் மூலம் ஏற்படும் விளைவுகளை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களும் அறிந்திருந்தனர் என நாசுக்காக கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம், "பந்தைச் சேதப்படுத்தியதன் தொடர்பாக நாங்கள் முழுமையான விசாரணையை மேற்கொண்டோம். அதில் அந்த சம்பவம் குறித்து வேறுயாரும் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும், தற்போது யாரேனும் அந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவலை அளிக்கும்பட்சத்தில் மீண்டும் விசாரணை நடத்த தயாராக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும், ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடையும், வார்னருக்கு ஓராண்டு தடையுடன் இனி வாழ்நாளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பேற்க முடியாது என மூவருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் தண்டனையளித்தது.
இதில் வார்னர், ஸ்மித் ஆகியோர் தற்போதும் அணியின் முதன்மையான வீரர்களாக இருந்துவருகிறார்கள். ஆனால் 28 வயதான பான்கிராப்ட் தன்னை அணியில் நிலைநிறுத்த தற்போதும் போராடி வருகிறார்.
இதையும் படிங்க: என்னைப் பற்றி யூகத்தில் எழுதாதீர்கள் : புவனேஷ்வர் குமார்