கிரிக்கெட் விளையாட்டில் நன்றாக விளையாடினாலும் அனைவராலும் தேசிய அணியில் இடம் பெற முடிவதில்லை. ஃபார்ம், கிரிக்கெட் அரசியல், என பல்வேறு தடைகளை தாண்டி சில வீரர்களே தேசிய அணியில் இடம் பெற்று தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு சாதனைகளை படைக்கின்றனர். அந்த வகையில் ரோகித் சர்மா இன்று உலக கோப்பை கேப்டனாக உயர்ந்து நிற்கிறார்.
தொடக்க ஆட்டக்காரராக ஆரம்ப கட்டத்தில் சோபிக்கவில்லை என்றாலும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தனது திறமையை நிருபித்தார். 2007இல் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா 16 வருடங்களுக்கு பிறகு தனது 248வது போட்டியில் இலங்கைக்கு எதிராக 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
சர்வதேச அளவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 15வது வீரர் ஆவார். ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் ரோகித் சர்மா. இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், கோலி ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர். மேலும் 10 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா(241). முதலிடத்தில் கோலி(205) உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு சதமடிப்பதே கனவாக இருந்த காலத்தில் சச்சின், சேவாக்கிற்கு பிறகு ஒருநாள் போட்டியில் அசால்டாக 3 இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்தார் ரோகித் சர்மா. இந்தியாவில் மட்டுமே நன்றாக விளையாடக் கூடியவர் ரோகித் சர்மா என குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவில் துணை கேப்டனாக களமிறங்கி 5 சதங்கள் அடித்தார்.
இது ஒரு உலக கோப்பையில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சதமாகும். அது மட்டுமின்றி 2019 ஆண்டில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் 78 சிக்ஸர்கள் அடித்தார். இது ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மென்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
அதே போல் டி20, டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார். டி20 சர்வதேச போட்டியில் 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா தான். சில மாதங்களுக்கு முன் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 13000 ரன்களை கடந்த 11வது வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோகித் தனது 307வது சர்வதேச போட்டியில் இந்த சாதனையை படைத்தார். அந்த வரிசையில் ஹெய்டன் (293), சச்சின் (295) ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
மேலும் சச்சினுக்கு பிறகு 10,11,12 ஆயிரம் ரன்களை அடித்த இரண்டாவது வீரர் ஆவார் ரோகித் சர்மா. கம்பீர், சேவாக் தொடக்க ஜோடிக்கு பிறகு தவான், ரோகித் ஜோடி பல்வேறு சாதனைகளை படைத்தது. தனது கிரிக்கெட் வாழ்வில் தொடக்க நாட்களில் காயம் காரணமாக ரோகித் சர்மா அவதிப்பட்டார். அப்போது ரோகித் சர்மாவால் சரியாக ஓட முடியவில்லை, குண்டாக இருக்கிறார் என உடல் கேலிக்கு ஆளானார்.
உடற்தகுதி இல்லாதவர் எதற்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார் என ரோகித் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தனது அதிரடி பேட்டிங்கால் பதிலடி கொடுத்து வருகிறார். ரோகித் சர்மா உலக கோப்பை நேரத்தில் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: IND Vs SL: இலங்கையின் அதிரடி பந்துவீச்சில் திணறிய இந்தியா.. 214 ரன்கள் இலக்கு!