ஹைதராபாத்: கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (செப். 14) அறிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் கடந்துவிட்டன. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அற்புதமான பயணமாக இருந்தது. எனது கிரிக்கெட் பயணம் நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.
ஒரு மனிதனாக என்னை உயர்த்திய இந்திய கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளேன். வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். உத்தப்பா 2004ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் முதல் முறை இந்தியாவுக்காக விளையாடினார்.
இந்திய அணியில் ஏப்ரல் 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 42 போட்டிகளில் 6 அரைசதங்களுடன் 934 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல 13 டி20 போட்டிகளில் விளையாடி 249 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஒரு அரை சதம் அடங்கும். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க: உலக கோப்பை டி20: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த IND Vs PAK போட்டிக்கான டிக்கெட்டுகள்