அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 19ஆம் தேதி நிறைவு பெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலக கோப்பை உச்சி முகர்ந்தது.
இந்நிலையில், முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது, பாதுகாப்பு விதிகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், இந்திய வீரர் விராட் கோலியை நோக்கி வேகமாக ஓடினார். விராட் கோலியை கட்டியணைக்க முயன்ற இளைஞரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் தடுத்து பிடித்துச் சென்றனர்.
தொடர்ந்து அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. விராட் கோலியின் தீவிர ரசிகரான அந்த இளைஞர், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த இளைஞர் குறித்து பல்வேறு தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
பிடிபட்ட இளைஞரிடம் இருந்து ஆஸ்திரேலிய நாட்டின் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரது பெயர் வென் ஜான்சன் எனக் முன்னர் கூறப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அவர் டி சர்ட் அணிந்து மைதானத்திற்குள் நுழைந்தது குறித்து நடத்திய விசாரணையில், வென் ஜான்சன் இதற்கு முன் இதேபோன்று பல்வேறு போட்டிகளில் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வரும் வென் ஜான்சனின் தந்தை சீன வம்சாவெளி என்றும் தாய் பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோலார் பேனல் நிறுவனத்தில் பணியாற்றும் வென் ஜான்சன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் எனக் கூறப்படுகிறது.
இதற்கு முன் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த வென் ஜான்சன், ரஷ்யா - உக்ரைன் போரை கண்டித்தும் உக்ரைனுக்கு ஆதரவாக தனது சட்டையில் வாசகங்கள் எழுதியும் மைதானத்திற்குள் வலம் வந்து உள்ளார். இந்த சம்பவத்திற்காக வென் ஜான்சனுக்கு 500 அமெரிக்கா டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபொல் கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ரக்பி போட்டியில் ஆட்டத்தின் இடையே மைதானத்திற்குள் நுழைந்து இடையூறு ஏற்படுத்தியதாக அந்நாட்டு நீதிமன்றம் வென் ஜான்சனுக்கு 200 டாலர்கள் அபராதம் விதித்து உள்ளது. விளையாட்டு போட்டியின் நடுவே மைதானத்திற்குள் புகுந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ள வென் ஜான்சன் குறித்து அகமதாபாத் குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.