துபாய்: ஆசிய கோப்பை 2022 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆக. 27ஆம் தேதி தொடங்கியது. இதன் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் இடம்பெற்றிருந்தன. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதன்பின் நேற்று சூப்பர் 4 சுற்றின் 2ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் உடன் மோதியது. முதல்லி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்கினர். ரோகித் சர்மா 28 ரன்னிலும், ராகுல் 28 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த விராட் கோலி பொறுப்பாக ஆடி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 13 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
ஹர்த்திக் பாண்டியா ரன்கள் ஏதும் எடுக்காமல் 2 பந்துகளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதி ஓவரில் ரவி பிஷ்னாய் 2 பவுண்டரி அடிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 14 ரன்களில் ரவி பிஷ்னாய் வீசிய பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஃபஹர் சமான் 15 ரன்னில் வெளியேறினார். ஆனால், அடுத்துவந்த முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்து புவனேஷ்குமார் வீசிய பந்தில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று ஆடி 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஹர்த்திக் பண்டியா பந்து வீச்சில் சூர்யகுமாரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து 182 ரன்கள் இலக்கை அடைந்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2022 முழு அட்டவணை... இந்தியா vs பாகிஸ்தான்...