ஐதராபாத் : 2023 ஆம் அண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1992, 1996 மற்றும் 1999 என மூன்று உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை வழிநடத்திச் சென்றவருமான முகமது அசாருதீன் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் முகமது அசாருதீன் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டு இருந்த முகமது அசாருதீன் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்லும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
இந்திய அணி லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதாகவும், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு நல்ல கலவையாக உள்ளது என்றார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று 2013 ஆம் ஆண்டு முதல் ஐசிசி கோப்பைகளை வெல்வதில் ஏற்பட்டு உள்ள வறட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் முகமது அசாருதீன் தெரிவித்தார்.
334 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள முகமது அசாருதீன் 9 ஆயிரத்து 378 ரன்களை குவித்து உள்ளார். 229 முதல் தர போட்டிகளில் 15 ஆயிரத்து 55 ரன்களை முகமது அசாருதீன் அடித்து உள்ளார். மேலும், இந்திய அணிக்காக முகமது அசாருதீன் 99 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் வெற்றி பயணத்தை தொடங்கிய இந்திய அணி கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றியுடன் தனது லீக் சுற்றை நிறைவு செய்தது. இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி தவிர்த்து இளம் வீரர்கள் சுப்மான் கில், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்திய அணி தனது முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நாளை (நவ. 15) நியூசிலாந்து அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின.
அந்த ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நினைவுபடுத்தும் வகையில் அதேபோன்று, நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்ட அதிர்ச்சி தோல்விக்கு இந்தமுறை இந்திய அணி பதிலடி கொடுக்குமா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க : IND Vs NZ: அரையிறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி!